பயன்படுத்தப்படாத நிலங்களில் உணவுப் பயிர்கள் – ஜனாதிபதி பணிப்புரை
பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான அனைத்துப் பயன்படுத்தப்படாத நிலங்களையும் கண்டறிந்து, உணவுப் பயிர்களைப் பயிரிடுவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அதிகாரிகளுக்கு அவர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமான 9,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான பயிரிடப்படாத நிலங்கள் உள்ளன.
23 நிறுவனங்களுக்கு சொந்தமான அந்த காணிகளில் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற பயிர்களை இனங்கண்டு, அவற்றை பயிரிடுபவர்களுக்கு வழங்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
தேயிலை ஏற்றுமதியினால் நாட்டிற்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி வெளிப்படைத் தன்மையுடன் பேணப்பட வேண்டும்.
அதற்காக தேயிலை ஏலத்தை டொலர்களில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
பெருந்தோட்டத் துறையில் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்காக எரிபொருளை வழங்கும் போது முறையான வேலைத்திட்டமொன்று அவசியமாகும்.
அமைச்சு அல்லது பிரதேச செயலாளரின் பரிந்துரையுடன் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு நியமிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விநியோகிப்பதற்கு முன்னுரிமை வழங்குவதற்கு குறித்த சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.