யாழில் மாயமான 16 வயது சிறுமி – கிளிநொச்சி வைத்தியசாலையில்
கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போனதாக கூறப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த 16 வயதான சிறுமி கிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குறித்த சிறுமி காணாமல்போன சம்பவம் தொடர்பாக பெற்றோர் வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுக்க சென்றபோது முறைப்பாடு ஏற்கப்படவில்லை என கூறப்படுகிறது.
அதன் பின்னர் இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இருந்த சிறுமியின் பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதில் உங்கள் பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனையடுத்து வைத்தியசாலைக்கு சென்ற பெற்றோர் மீண்டும் யாழ்ப்பாணம் வருகைதந்து ஆளுநர் செயலகத்தை நாடியுள்ளனர்.
இதனையடுத்து ஆளுநர் செயலகம் இந்த விடயத்தில் தலையிட்டுள்ளதுடன், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருடன் பேசியதையடுத்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யும்படி சிறுமியின் பெற்றோருக்கு கூறப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
மருத்துவமனையில் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்பே சிறுமிக்கு என்ன நடந்தது என்பது வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
அதேவேளை, சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தது யார்? என்பது போன்ற மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.