யாழில் வைத்தியசாலையின் அசமந்தத்தால் நபர் ஓருவர் பரிதாபமாக உயிரிழப்பு
நயினாதீவில் நிலைதவறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்த குடும்பத்தலைவருக்கு உரிய சிகிச்சையளிக்க நயினாதீவு பிரதேச வைத்தியசாலை பணியாளர்களின் அசமந்தத்தால், அவர் உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நயினாதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சிற்றம்பலம் செல்வக்குமார் (வயது-42) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
நயினாதீவு இறங்குதுறையில் இன்று மாலை 6.30 மணிக்கு வந்தடைந்த பயணிகள் படகில் வந்திறங்கிய குடும்பத்தலைவர், அங்கிருந்து லாண்ட்மாஸ்டரில் வீடு செல்லும் போது, ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீதி வளைவில் வாகனம் திரும்பியபோது நிலைதடுமாறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்துள்ளார்.
அதனை அடுத்து அவரை உடனடியாக நயினாதீவு பிரதேச மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அங்கிருந்த பணியாளர்கள் அனுமதிக்க மறுத்தனர், அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று சுத்தம் செய்துவிட்டு அழைத்து வருமாறு குறிப்பிட்டனர் அதனால், காலதாமதம் ஏற்பட்டு குடும்பத்தலைவர் உயிரிழந்தார் என உறவினர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை குறித்த நபர் மதுபோதையில் இருந்தமையால், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் போனதாக வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சம்பவம் தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.