யாழில் குடும்ப பெண் அதிரடியாக கைது
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொதியினை கைப்பற்றி யாழ்ப்பாண பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளனர்.
அரியாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் குடும்ப பெண் ஒருவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த பெண் கண்காணிக்கப்பட்டார்.
இதனையடுத்து அவர் கஞ்சா போதைப்பொருளை வீட்டில் மறைத்து வைத்து விற்பனை செய்யும் தருணம் உபகாவற்த்துறை பரிசோதகர் தலைமையிலான குழுவினர் குறித்த வீட்டை சுற்றிவளைத்தனர்.
இதன்போது விற்பனைக்காக வைத்திருந்த 2 கிலோ கஞ்சா பொதியினை அப் பெண்ணின் உடமையில் இருந்து மீட்டதுடன் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் அரியாலை பகுதியை சேர்ந்த 49 வயதுடையவர் என தெரிய வருகின்றது.
யாழ்ப்பாணத்தில் போதை பொருள் விற்பனையில் பெண்கள் ஈடுபடுவது அதிகரித்துள்ள நிலையில் கடந்த 6 மாத காலப்பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் 8 பெண்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.