நாடளாவிய ரீதியில் சுகாதார உதவியாளர்கள், பரிசாரகர்கள் உட்பட இணைந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் சுகாதார சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. இதனால் நோயாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
மருத்துவ சேவைகளுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை ஏனைய சேவைகளுக்கும் வழங்குமாறு கோரி, நாடளாவிய ரீதியில் இருக்கும் வைத்தியசாலையில் பணியாற்றும் நிர்வாக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி சுகாதார முகாமைத்துவ உதவியாளர்கள், வைத்தியசாலை மேற்பார்வையாளர்கள், தொலைபேசி இயக்குனர்கள், பரிசாரகர்கள், சுகாதாரப் பணி உதவியாளர்கள் ஆகிய அனைத்து சுகாதார ஊழியர்கள் உட்பட இணைந்த சுகாதார தொழிற்சங்கங்களால் சுகயீன விடுமுறை போராட்டம் இன்று (11) முன்னெடுக்கப்படுவதாக சுகாதார தொழிற்சங்கத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கு ஆதரவு தெரிவித்து இன்று (11.01.2024) காலை 6 மணி மணியிலிருந்து நாளை (12) காலை 8 மணி வரை வேலை நிறுத்த போராட்ட நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளில் பணியாற்றும் ஊழியர்களும் ஈடுபட்டு வருகின்றனர்
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையிலும் பணிப்பகிஸ்கரிப்பும் , கவனயீர்ப்பு போராட்டமும் இன்று இடம்பெற்றிருந்தது.
குறிப்பாக பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்ட நிலையில் தமக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கபடவில்லை. எனவே அரசாங்கத்தின் அநீதியான பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.