வடக்கு, கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்
வடக்கு, கிழக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் அத்துமீறல்கள், பௌத்த மயமாக்கல் நடவடிக்கை, புதிய பயங்கரவாத திருத்தச் சட்டம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகள் விடுத்துள்ள பொது கதவடைப்பிற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவினை வழங்கியுள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் எதிர்வரும் 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ள நிலையில் அச்சட்டமூலத்திற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் வகையிலும், வடக்கு கிழக்கில் பௌத்த, இராணுவ மயமாக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராகவும் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பொது கடையடைப்பு போராட்டத்திற்கு 7 தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்திருந்தன.
இதற்கமைய, வடக்கு, கிழக்கில் இன்று (25) பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஹர்த்தாலுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பெருமளவு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள், வியாபாரிகள், தொழிற்சங்கங்கள், தனியார் போக்குவரத்து துறையினர், பல்கலைகழக மாணவர்கள் என சகலரும் ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளனர்.