விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு தயார் – ஆசிரியர் சங்கம்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

எந்த நேரத்திலும் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு தயார் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இதுவரை 12,000 ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எனினும், உயர்தர விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்னும் இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்காக வழங்கப்படும் உதவித்தொகை போதாது எனக் கூறி ஆசிரியர்கள் பணியிலிருந்து விலகியதால் நெருக்கடி நிலை ஏற்பட்டது.

அதன் பின்னர் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, ஆசிரியர்கள் கோரிய உதவித்தொகையை வழங்க கல்வி அமைச்சு சம்மதம் தெரிவித்ததையடுத்து, மீண்டும் விடைத்தாள் மதிப்பீட்டிற்கு செல்ல ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஆனால், உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் இருந்து பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் விலகியதால், 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணத்தர பரீட்சையும் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு தொடர்பான இறுதிக்கட்ட கலந்துரையாடல் நாளை பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.