66 சதவீதத்தால் அதிகரிக்கும் மின் கட்டணம்


மின்சாரக் கட்டணத்தை 66 சத வீதத்தால் அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று (15) முதல் இந்த மின் கட்டண உயர்வு அமுலுக்குவரும் என்றும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்று (14) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் மின்சார கட்டணத்தை 66 சத வீத்ததால் அதிகரிக்க அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தவிர்ந்த ஏனைய 03 உறுப்பினர்களின் இணக்கப்பாட்டிற்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு மேலதிகமாக 287 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டும் நோக்கில், அமைச்சரவையால் அனுமதி வழங்கப்பட்ட 66% மின் கட்டண அதிகரிப்பு யோசனை கடந்த மாதம் 02 ஆம் திகதி இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த யோசனைக்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன், ஆணைக்குழுவின் சில உறுப்பினர்கள் பதவிகளை இராஜினாமா செய்தனர்.

வெற்றிடம் ஏற்பட்ட பதவிகளுக்காக புதிய உறுப்பினர்கள் மூவர், 02 சந்தர்ப்பங்களில் நியமிக்கப்பட்டதுடன், மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான யோசனை குறித்த கலந்துரையாடல் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவரின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் ஏனைய அனைத்து தரப்பினரின் யோசனைகளுக்கு அமைவாக, 142 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் வகையில், 36% மின் கட்டண அதிகரிப்பிற்கு ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டதுடன், குறித்த யோசனை ஜனக்க ரத்நாயக்கவினால் நேற்று (14) முன்வைக்கப்பட்டது.

எவ்வாறாயினும், குறித்த யோசனைக்கு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க மாத்திரம் இணக்கம் தெரிவித்தமையினால், அது நிராகரிக்கப்பட்டது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களான சட்டத்தரணி சதுரிக்கா விஜேசிங்க, டக்ளஸ் நாணயக்கார மற்றும் S.G. சேனாரத்ன ஆகியோரே குறித்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கமைய, ஆணைக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்களின் இணக்கத்தின் அடிப்படையில், மின் கட்டணத்தை 66 வீதத்தால் அதிகரிப்பதற்கான யோசனை நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், மின் கட்டணப்பட்டியல் தயாரிக்கப்படும் விதம் தொடர்பில் ஆணைக்குழுவும் இலங்கை மின்சார சபையும் விளக்கமளித்துள்ளன.

புதிய மின் கட்டண திருத்தங்களுக்கு அமைவாக, 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கான மின் கட்டணம் 276 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 60 அலகுகளை பயன்படுத்தும் வீடொன்றுக்கான மின் கட்டணத்திற்கு இதுவரை நடைமுறையிலிருந்த 680 ரூபா கட்டணத் தொகை 2560 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

புதிய கட்டணத் திருத்தத்திற்கு அமைவாக, 30 அலகுகள் பயன்பாட்டை கொண்ட வீடொன்றுக்கு இதுவரை காணப்பட்ட 360 ரூபா மின் கட்டணம் 1300 ரூபா வரை அதிகரிக்கப்படும். இது 261% அதிகரிப்பாகும்.

90 அலகு பயன்பாட்டிற்காக இதுவரை அறவிடப்பட்ட 1800 ரூபா மின் கட்டணம், புதிய திருத்தத்திற்கு அமைவாக 4430 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

200 அலகுகளுக்கும் மேற்பட்ட மின்சார பாவனையைக் கொண்ட வீடுகளுக்காக மின் கட்டணம் 32 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கட்டண திருத்தத்தின் கீழ் சாதாரணமாக வீடொன்றில் பயன்படுத்தப்படும் மின்சாரம், 900 அலகிற்கான பிரிவிற்குள் உள்ளடங்கி, மின் கட்டணம் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த மின் கட்டண அதிகரிப்பு யோசனைக்கு இலங்கைப் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் நேற்று அனுமதி வழங்கப்பட்டது.

மின்சார சபையினால் கோரப்பட்டிருந்த மின் கட்டண திருத்தத்தில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளாமல் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மின்சார சபை கோரிய கட்டண திருத்தத்தின் அடிப்படையில், பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மின்சார கட்டண முறையை முன்மொழிந்த போதிலும், ஆணைக்குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *