தேர்தல் பணத்தை மக்களது பட்டினியை போக்க பயன்படுத்துங்கள் – பொருளாதார ஆய்வாளர்கள்


உள்ளூராட்சி மன்றத்தேர்தல் இடம்பெற்றால் 3 பிரதான கட்சிகளுக்கு மாத்திரம் 72 பில்லியன் ரூபாவை செலவிட நேரிடும். அந்த பணத்தை தற்போதுள்ள நிலைமையில் மக்களின் பட்டினியைப் போக்குவதற்கு உபயோகிக்குமாறு கோரி சுயாதீன பொருளாதார ஆய்வாளர்கள் அரசாங்கத்திடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களின் துயரத்தை கண்டு முதலைக் கண்ணீர் வடிக்கும் அரசியல் கட்சிகள், உண்மையில் மக்களை நேசிப்பதாக இருந்தால் தேர்தலுக்காக செலவிடும் பணத்தை ஏன் அவர்களின் பட்டினியைப் போக்குவதற்காக வழங்கக் கூடாது என்றும் அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். தேர்தலுக்காக அரசாங்கத்திற்கு ஏற்படும் செலவிற்கு மேலதிகமாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மேலதிக செலவை ஏற்க வேண்டும் என பொருளாதார ஆய்வாளர் குழு அரசாங்கத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

அக்குழுவினரின் மதிப்பீட்டுக்கமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வேட்பாளர் ஒருவருக்கு குறைந்தது 30 இலட்சம் ரூபா செலவிட நேரிடும் எனக் கணிப்பிட்டால் , அரசியல் கட்சிகளின் சார்பில் களமிறங்கும் 8,000 வேட்பாளர்களுக்கு 24 பில்லியன் அதாவது 2,400 கோடி செலவிட நேரிடும்.

அதற்கமைய பிரதான 3 கட்சிகளும் இவ்வாறு 24 பில்லியன் என்ற அடிப்படையில் , 72 பில்லியன் ரூபாவினை தேர்தலுக்காக செலவிட நேரிடும். பிரசுரங்கள் அச்சிடுதல் மற்றும் இதர செலவுகளைக் கணக்கில் கொண்டு ஒரு வேட்பாளருக்கு எந்தளவு பணம் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதில் 50 சதவீதமான செலவுகளை அரசாங்கத்திற்கு ஏற்க நேரிடும் எனத் தெரிவித்துள்ள ஆய்வாளர்கள் , இந்த நெருக்கடியான கால கட்டத்தில் முன்னுரிமையை அறிந்து தீர்மானங்களை எடுக்காவிட்டால் முழு நாட்டு மக்களும் அதற்கான இழப்பீட்டை செலுத்த நேரிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்கத்திற்கு இது தொடர்பில் விளக்கமளித்த இலங்கை பொருளாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் விஜிதபுரே விமலரதன தேரர், சிறுவர் மந்த போசனை, பசி, வறுமை மற்றும் வேலையின்மை அதிகரித்து வரும் வேளையில், அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் சில தியாகங்களைச் செய்து, பொருளாதாரம் என்ற புகையிரதத்தை சரியான பாதையில் பயணிக்கச் செய்ய வேண்டும்.

இந்த தருணத்தில் நாம் குறுகிய அரசியல் இலாபங்களுக்காக செயற்பட்டால் நாடு கடந்த யுகத்தை விட மிக மோசமான நிலைக்கு தள்ளப்படலாம் எனவும் விமலரதன தேரர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்பவர்கள் மக்களை ஏமாற்றி மோசடி செய்த பணத்தையே செலவு செய்கின்றனர். தேர்தல் வெற்றியின் பின்னர் இதனை விட பன்மடங்கு இலாபமீட்ட முடியும் என்ற நோக்கத்துடனேயே அவர்கள் இவ்வாறு செலவுகளை செய்கின்றனர்.

மேலும், வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படும் ஒரு கட்சியைச் சுற்றி வர்த்தகர்களும் ஒன்று சேர்வதாக தெரிவித்த விமலரதன தேரர், இலங்கையின் பொருளாதாரம் இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அளவிற்கு வலுவாக இல்லை என்பதை அரசாங்கம் உணர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *