கிளிநொச்சி சுகாதார சேவை பணிப்பாளர் இடமாற்றம்
கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ந. சரவணபவனின் திடீர் இடமாற்றமும் அதனோடு இணைந்த சம்பவங்களும் எமக்கு அதிர்ச்சியையும், ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தி உள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேற்படி மருத்துவர் சங்கம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிளிநொச்சி மாவட்டத்தின் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கம் முறைப்படி நியமிக்கப்பட்டு கடமையாற்றி வருகின்றார்.
இதுவரை காலமும் அவரது சிறப்பான பணிகளுக்காக இம்மாவட்ட மக்களும் சுகாதாரப்பணியாளர்களும் மிகவும் நேசிக்கப்படும்,மதிக்கப்படும் ஒருவராவார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக நியமிக்கப்பட்ட காலம் தொடக்கம் பல சவாலான பணிகளையும் மிகவும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்றும் ஒருவர் என்பதை நாம் அறிவோம்.
குறிப்பாக கோவிட் -19 பெரும் தொற்று காலத்திலும் அதிலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக அவர் ஆற்றிய பணி மிகப்பெரும் பணியாகும் மாவட்டத்தின் அனைத்து வளங்களையும் ஒருங்கிணைத்து சுகாதாரப் பணியாளர்களை நெறிப்படுத்தி கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்த பெரும் பங்காற்றியவர்.
இதன் பின்னர் நாட்டில் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியின் போதும் குறிப்பாக எரிபொருள் நெருக்கடியின் போதும் அதனை சவாலுடன் எதிர் கொண்டு தமது பணியாளர்கள் வினைத்திறனுடன், பணியாற்ற வழி சமைத்தவர் தனது பனிக்காலத்தில் பெரும்பகுதியை மக்களின் பொது சுகாதாரத்தை முன்னேற்றும் நோய் தடுப்பு வழிகளை பயன்படுத்தி சேவையாற்றிய ஒருவர் 2017 ஆம் ஆண்டு டெங்கு நோய் தாக்கம் திருகோணமலை மாவட்டத்தில் கோர தாண்டவம் ஆடியபோது அதனை முன் நின்று அர்ப்பணிப்புடன் கட்டுப்படுத்த பணியாற்றியதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இவ்வாறான ஒரு அதிகாரியை அதிர்ச்சி அளிக்கும் வகையில் திடீரென பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை எமக்கு ஆழ்ந்த வேதனையையும்,கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணபுரம் தொற்று நோயியல் வைத்தியசாலையில் இடம்பெற்ற முறைகேடுகளை தொடர்ந்து அதனை விசாரணை செய்யும் நோக்கில் இவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும் அவரை திட்டமிட்டு பழிவாங்கும் நீண்ட காலத்திட்டத்தின் அடிப்படையில் இடமாற்றம் செய்ததாகவே நாம் நம்புகின்றோம் .
கிருஷ்ணபுரம் தொற்று நோய் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் முழுமையாக விசாரணை செய்யப்பட்டு நிறைவு பெறுவதற்கு முன்னர் எவ்வாறு வைத்தியர் சரவணபவன் குற்றவாளியாக இனங்காணப்பட்டு திடீரென முறையற்ற விதத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார் என்ற கேள்வியையும் மேற்படி சங்கத்தின் ஆளுனர் சபை குறித்த ஊடக அறிக்கை ஊடாக எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.