விறகு எடுப்பதற்காக சென்ற வயோதிபர் சடலமாக மீட்பு
திருகோணமலை-லிங்கநகர் அம்மன் கோயில் பகுதியிலுள்ள காட்டுப் பகுதிக்கு விறகு எடுப்பதற்காக சென்ற வயோதிபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 30 ஆம் திகதி விறகு எடுப்பதற்காக சென்று வீடு திரும்பாத நிலையில் அக்காட்டு பகுதியை சோதனையிட்டபோது அவருடைய சடலம் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம்(01.12.2022) மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் திருகோணமலை லிங்கநகர் முருகன் கோயில் 25 ஆவது ஒழுங்கையில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான நாகரட்ணம் நடேசபிள்ளை (79வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை நகர சபையில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர் எனவும் அவருடைய சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மரணம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.