திருக்கேதீச்சரத்தில் தொடர்ச்சியாக திருட்டு – கட்டி வைத்த பொதுமக்கள்
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதி மற்றும் கிராமப் பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த அடம்பன் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்றைய தினம் (20) ஞாயிற்றுக்கிழமை மதியம் அப்பகுதி மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு உயிலங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பகுதி மற்றும் கிராமப் பகுதியில் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பணப்பைகள் திருடுவதும் ஆலய பகுதியில் உள்ள கிராமத்தில் மக்களின் வீடுகளில் திருடுவதை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை மதியம் திருக்கேதீஸ்வர ஆலய மக்களினால் குறித்த இளைஞர் மடக்கி பிடிக்கப்பட்டார்.
ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் உடைத்து பணம் திருடுவதும் அவர்களின் உடமைகளை திருடுவது தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை கோயில் வளாகத்தில் வாகனம் ஒன்றை உடைத்து திருட முற்பட்ட போது மக்கள் அவரை துரத்திச் சென்றபோது தப்பிச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த நபர் ஆலய வளாகத்தில் நடமாடிய போது மக்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.