கல்விக்கு பணம் வசூலிக்க அரசு அதிரடி தீர்மானம்


“ரணில் ராஜபக்ச” அரசாங்கம் கல்வி தொடர்பில் இதுவரையில் இருந்து வந்த உரிமைகளை திட்டமிட்டு முடக்கி வருவதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளின் போது கல்வியில் சித்தியடையாத மாணவர்கள் இலவச தொழில் பயிற்சிக்கு செல்லும் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய பயிலுனர் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி அதிகாரசபை உட்பட ஏனைய தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்களை இணைத்து பணம் வசூலிக்கும் முறையை உருவாக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போது தெரிவித்தார்.

தற்போதைய அரசு என்ன செய்துள்ளது? அந்த கற்கைகளுக்கும் பணம் வசூலிக்க தீர்மானம் எடுத்துள்ளது. பணம் வசூலித்து அந்தப் பாடநெறிகளை நடத்துவது தொடர்பாக பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதையும் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் ஊடகவியலாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

ஏழ்மையான மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் தொழில் பயிற்சியில் ஈடுபடுவதைச் சுட்டிக்காட்டிய ஆசிரியர் சங்கத் தலைவர், இவ்வாறு பணம் வசூலிக்க தீர்மானிப்பதால், அந்த மாணவர்களும் அவ்வாறான கல்வி நிறுவனங்களுக்குச் செல்வதைத் தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.

பொதுவாக கிராமங்களில், படிப்பில் தோல்வியடைந்து பரீட்சையில் தேர்ச்சி பெற முடியாதவர்கள், வேறு வழிகளில் கல்வி கற்க வேண்டும் என்றால், அது பணத்திற்கு விற்கப்படும் போது, இந்தக் பிள்ளைகள் எங்கே போவார்கள்? முடியாதவர்களின் கதி என்னவாகும் என்பது நமக்குத் தெரியும்.

என ஊடக சந்திப்பில் ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஆரம்பத்தில் உயர் கல்விக்கென தனியான அமைச்சரவை அமைச்சு இருந்த போதிலும், கடந்த அரசாங்க காலத்தில் அது இராஜாங்க அமைச்சு என பெயரிடப்பட்ட நிலையில், தற்போதைய அரசாங்கம் கல்வி அமைச்சின் மற்றுமொரு பிரிவாக இதனை உருவாக்கியுள்ளது என ஆசிரியர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறைந்த வருமானம் பெறும் பிள்ளைகள் கல்வியில் உயர்நிலையை அடையும் வாய்ப்பு பணத்தை செலுத்தி கல்வியை பெற வேண்டியுள்ளதால் இழக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், உயர்நிலைக் கல்வியின் ஒரு பகுதியாகக் கருதப்படும் தொழிற்பயிற்சியை கீழ் நிலைக்கு கொண்டுச் செல்வதன் ஊடாக பொறுப்புள்ள தரப்பினர் எதிர்பார்ப்பது என்னவெனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அரசாங்கம் செலவைக் குறைக்க முயற்சிக்கிறது. கல்வியை இல்லாது செய்ய முயற்சிக்கிறது.” எனக் கூறியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பாடநெறிகளுக்கு பணம் வசூலிக்கும் தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு கல்வி அமைச்சை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *