மன்னார் மனித புதைக்குழி வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு


மன்னார் ´சதோச மனித புதைகுழி´ மற்றும் ´திருக்கேதீஸ்வர மனித புதைக்குழி´ வழக்கானது இன்றைய தினம் புதன்கிழமை (21) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் குறித்த இரு வழக்குகளும் இன்றைய தினம் (21) விசாரிக்கப்பட்ட நிலையில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டது டன் கட்டளை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

இன்று (21) திருக்கேதீஸ்வர மனித புதைகுழி வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஏற்கனவே கடந்த தவணை நீதிமன்றத்தால் கட்டளை ஒன்று ஆக்கப்பட்டிருந்தது.

இந்த புதை குழியிலிருந்து ஏற்கனவே எடுத்துச் செல்லப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள மனித எச்சங்கள் மீண்டும் மன்னார் நீதவான் முன்னிலையில் கொண்டு வந்து அமெரிக்கா புளோரிடா நிறுவனத்திற்கு பரிசோதனைக்கு அனுப்புவதற்கான மாதிரிகளை தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வழக்கு தொடுனர் தரப்பான அரசு தரப்பு இன்று (21) நீதிமன்றத்திற்கு வருகை தந்த வைத்தியர் இந்த மாதிரிகளை மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கொண்டு வந்து ஆய்வு செய்வதாக இருந்தால் பல வருடங்கள் பழமை வாய்ந்த இந்த மாதிரிகளை இங்கு கொண்டு வந்து மீண்டும் கொழும்புக்கு கொண்டு செல்லும் போது இந்த அகழ்வு பொருட்கள் இந்த வழக்கு பொருட்கள் சேதமாகும் பாதிக்கப்படும் என்ற அடிப்படையில் தாங்கள் அதனை அனுராதபுர நீதவான் முன்னிலையில் பிரித்தெடுத்தலை செய்வதற்கான கட்டளை ஒன்றை வழங்குமாறு கேட்டு இருந்தார்கள்.

அதற்கு வழக்கு தொடுனர் தரப்பில் நாங்கள் கடுமையான ஆட்சேபனையும் எதிர்ப்பும் தெரிவித்து இருந்தோம். இந்த நிலையில் மன்னார் நீதவான் அனுராதபுரம் நீதிமன்றத்தின் சென்று அகழ்வு எடுக்கப்பட்ட மனித எச்சங்களை பிரித்து எடுப்பதற்கு தனக்கு நியாயதிக்கம் இல்லை எனவும் மன்னார் நீதவான் நீதிமன்ற எல்லைக்குள் அது நடைபெற வேண்டும் என்று அவ்வாறு செய்வதற்கு வழக்கு தொடுனர் தரப்பு வைத்தியர்களுக்கு அசெளகரியங்கள் இருக்குமானால் அதற்கான நடவடிக்கை எடுத்து அனுராதபுரம் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் அந்த பிரித்தெடுத்தல் நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று மீண்டும் ஒரு கட்டளை ஆக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கானது நவம்பர் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் மேலதிக நடவடிக்கைக்காக அழைக்கப்பட உள்ளது. அதே நேரம் மன்னார் சதோச மனித புதைகுழி வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே, வைத்தியர் ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை ஒன்று வழங்கப்பட்டிருந்தது. நீதிமன்றத்திற்கு தோன்றுவதற்கு. ஆனால் அவர் இன்று சமூகம் அளிக்கவில்லை.

அதை தொடர்ந்து இன்று மன்னார் பொலிஸார் நீதிமன்றத்திற்கு வருகை தந்து வைத்தியர்கள் இன்று நீதி மன்றத்தில் தோன்றுவதில் அசெளகரியங்கள் இருப்பதாகவும் தனக்கு அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக முடியும் எனவும் கூறியிருந்தனர்.

அதேநேரம் புளோரிடா நிறுவனத்திடம் இருந்து வந்த அறிக்கை ஒன்று இன்று (21) தபால் மூலம் மன்னார் நீதவான் நீதிமன்றத்திற்கு கிடைக்க பெற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

நாங்கள் அதற்கான அத்தாட்சி படுத்தப்பட்ட பிரதியை எடுத்து பார்க்க வேண்டி இருக்கின்றது எனவும் அது ஏற்கனவே வைத்தியரால் நீதிமன்றத்தில் கோப்பிட பட்டுள்ளதாகவும் அந்த அடிப்படையில் இந்த வழக்கானது மீண்டும் அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி மேலதிக நடவடிக்கைகளுக்காக திகதி யிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *