யாழில் வர்த்தகரிடம் இருந்து 10 இலட்சம் ரூபா கொள்ளை
யாழ்ப்பாணம் – கோட்டை – முனியப்பர் ஆலயத்தில் வைத்து, 10 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறை முன்னெடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில், விவசாய உபகரண உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் ஒருவரிடம், குறித்த உதிரிப்பாகங்களைக் கொள்வனவு செய்வதற்காக, வாழைச்சேனையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தமது மனைவியுடன் நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார்.
இரண்டு வர்த்தகர்களுக்கும் இடையே ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில், 20 இலட்சம் ரூபா பெறுமதியான உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்ய குறித்த வர்த்தகர் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், அவர்கள் காங்கேசன்துறை வீதியிலுள்ள கோட்டை – முனியப்பர் கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்டபோது, 10 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகரான சந்தேகநபரும், அவரின் சகோதரரும் குறித்த பணத்தைக் கொள்ளையிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தலைமையகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கையிட்டு, சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்காக, யாழ்ப்பாணம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.