எரிபொருள் வரிசையில் நின்றவர்களை மோதித்தள்ளிய கார்
அளுத்கம காவல் நிலையத்திற்கு அருகில் அளுத்கம நோக்கிச் சென்ற வைத்தியர் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் எரிபொருளுக்கு நின்ற இருவர் காயமடைந்து (16) களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அளுத்கம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பெந்தோட்டை ஹபுருகல மற்றும் மஹாவில பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு சாரதிகள் விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அளுத்கம காவல்துறையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ள குறித்த வைத்தியர் தெஹிவளை பின்வத்தை பிரதேசத்தை வசிப்பிடமாகவும், மட்டக்களப்பு வைத்தியசாலையில் பணிபுரிபவர் எனவும் காவல்துறையினர்தெரிவித்தனர்.
இன்று காலை பேருவளை பிரதேசத்தில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தெஹிவளையில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து தர்கா நகரில் உள்ள மற்றுமொரு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வைத்தியரின் கார் காலி கொழும்பு பிரதான வீதியில் அளுத்கம நகரின் ஊடாக தெற்கு நோக்கி அதிவேகமாக பயணித்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.