பொலிஸாரிடம் முறைப்பாடு – அடித்து நொறுக்கிய மணல் கள்ளர்கள்
சட்டவிரோத மணல் கள்ளர்கள் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கிய பிரதேசசபை உறுப்பினரின் வீடு மற்றும் வர்த்தக நிலையத்தின் கதவுகளை மணல் கள்ளர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது.
மருதங்குளம் மற்றும் உப்பாறு ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக விவசாய நிலங்களிலும் விவசாய வீதிகளிலும் சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் விவசாயிகள் தங்களுடைய பயிர் செய்கைகளுக்கு நீர்ப்பாசனம் செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு நேற்றைய தினம் (19-05-2022) விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள்
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு சென்று உயர் அதிகாரிகளை சந்தித்து மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்துமாறு கோரியிருந்தனர்.
இதனையடுத்து அவர்களது தொலை பேசிகளுக்கு அழைப்பெடுத்து அச்சுறுத்தல்களை விடுத்திருந்தனர்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியும் பொலிசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்றிரவு கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் மயில் வாகனம் நந்தகுமார் என்பவரின் வர்தக நிலையத்துக்கு
முகத்தை மூடிக் கட்டியவாறு மோட்டார் சைக்கிளில் சென்ற மூவர் அவரது வர்த்தக நிலையம் மற்றும் வீட்டின் கதவு, தளபாடங்களை அடித்து சேதமாக்கியுள்ளனர்.
குறித்த சம்பவம் சீ.சீ ரீ வி கமராமூலம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.