அம்பாறையில் பாரிய சொறிமுட்டையில் (ஜெலி) அகப்பட்டு மீனவர் உயிரிழப்பு
அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(8) காலை 7 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சொறிமுட்டைக்கடிக்கு உள்ளான மீனவர் சக மீனவர்களால் மீட்கப்பட்டு காரைதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்த மீனவர் மாயவலை மூலம் மீன் பிடிப்பதற்கு சக மீனவர்களுடன் இணைந்து மீன்பிடியில் ஈடுபட்ட பின்னர் கடற்கரையில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் படகில் இருந்து கடலில் இறங்கி வலையை சரி செய்ய முயற்சித்துள்ளார்.
இவ்வாறு வலையை சரி செய்ய கடலுக்குள் இறங்கிய மீனவரை பாரிய சொறிமுட்டை தாக்கியதுடன் அவரது நெஞ்சுப்பகுதியில் தாக்குதலுக்குள்ளான அடையாளங்களும் காணப்படுவதாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த காரைதீவு தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார.
உடனடியாக கடலில் இருந்து சக மீனவர்களால் மீட்கப்பட்ட குறித்த மீனவர் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 3 பிள்ளைகளின் தந்தை என்பதுடன் காரைதீவு 8 ஆம் பிரிவினை சேர்ந்த சுப்ரமணியம் ஜெயரஞ்சன் (வயது-51) என அடையாளம் காணப்படட்டுள்ளார்.
தற்போது உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.