மஹிந்த ராஜபக்ஷ நாளை பதவி விலகுகிறார்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை (04) தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமித்த அரசாங்கத்தை நியமிப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் யோசனைகளைப் பெற நியமிக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் இன்று (03) முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழுவைச் சந்தித்து கலந்துரையாடினர்.
இக்கலந்துரையாடலில் குழுவின் சார்பில் நிமல் சிறிபால டி சில்வா, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, டிரான் அலஸ் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில், சுயாதீன பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, நிமல் லான்சா மற்றும் நளின் பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, ராஜித சேனாரத்ன, கலாநிதி ஹர்ஷ டி சில்வா, கயந்த கருணாதிலக, எரான் விக்ரமரத்ன ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.