சிங்களவர்கள் செய்தது சரி – காட்டுமிராண்டித்தனத்தை நியாயப்படுத்தும் கம்மன்பில


விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் சிங்கள சமூகத்தின் மத்தியில் கோபம், வெறுப்பு காணப்படுவது இல்பானதாகும். இவ்வாறான பின்னணியில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில் சிங்களவர்கள் வாழும் பகுதிக்கு ஊர்தி பவனி செல்வது சிங்களவர்களை ஆத்திரத்திற்குள்ளாக்கி இன முரண்பாட்டை ஏற்படுத்தும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அரசியல் அமைப்பை மீறியுள்ளார். ஆகவே உடனடியாக அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகள் அமைப்பினரின் நோக்கங்களுக்காக உயிர் தியாகம் செய்த திலீபனை நினைவு கூரும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கிழக்கு மாகாணத்தில் இருந்து வடக்கு மகாகாணத்திற்கு ஊர்திப் பவனியில செல்லும் போது சிங்களவர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

திலீபன் என்பவர் இந்த நாட்டை பிளவுப்படுத்தும் நோக்கத்துடன் செயற்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர். விடுதலைப் புலிகளின் நோக்கத்திற்காகவே தனது உயிரை திலீபன் தியாகம் செய்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்டு இந்த நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பை பிரதிபலிக்கும் வகையில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான வாகனத்தில் திலீபனின் உருவப்படத்தை வைத்து கிழக்கு மாகாணத்தில் இருந்து வடக்கு மாகாணம் நோக்கி வாகனப் பவனியில் செல்வதற்கு யார் அனுமதி வழங்கியது?

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினராக திலீபனின் உருவப் படத்தை சுமந்து பொது இடத்தில் பகிரங்கமாக செல்வதற்கு அரச அதிகாரி அனுமதி வழங்கியிருந்தால் அவர் அரசியலமைப்பின் 157 அ பிரிவை முழுமையாக மீறி பிரிவினைவாதத்திற்கு அனுசரணை வழங்கியுள்ளதாகக் கருத வேண்டும்.

நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையில் அரச அதிகாரி செயற்படுவதற்கு அரசியல்வாதியொருவர் அழுத்தம் பிரயோகித்திருந்தால் உடனடியாக அந்த அரசியல்வாதி கைது செய்யப்பட்டு அரசியலமைப்பின் 157 அ பிரிவு பாதுகாக்கப்பட வேண்டும்.

சாதாரண சிங்கள சமூகத்தினரை இலக்காகக் கொண்டு விடுதலைப் புலிகள் அமைப்பு 300இற்கும் மேற்பட்ட தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. பிரிவினைவாதத் தாக்குதலால் ஒட்டுமொத்த சிங்களச் சமூகமும் பாதிக்கப்பட்டுள்ளது. சிங்களவர்கள் தமது உறவுகளை இழந்துள்ளார்கள்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பில் சிங்கள சமூகத்தின் மத்தியில் கோபம், வெறுப்பு காணப்படுவது இயல்பானதாகும். இவ்வாறான பின்னணியில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில் சிங்களவர்கள் வாழும் பகுதிக்கு ஊர்திப் பவனி செல்வது சிங்களவர்களை ஆத்திரத்திற்குள்ளாக்கி இன முரண்பாட்டை ஏற்படுத்தும் ஒரு சூழ்ச்சியாகும்.

2007ஆம்ஆண்டு 57ஆவது இலக்கத்தின் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாய சட்டத்தின் 3ஆவது பிரிவுக்கமைய இனவாத முரண்பாடுகள் தோற்றம் பெறும் வகையில், மக்களை ஆத்திரமூட்டும் வகையில் முன்னெடுக்கும் சகல செயற்பாடுகளும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

அவை பாரதூரமான குற்றச்சாட்டாகக் கருதப்படுவதால்தான் அவ்வாறனான செயற்பாடுகளில் ஈடுபடும் நபருக்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு வழங்கப்படவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் அரசியலமைப்பின் 157 அ பிரிவை மீறியுள்ளார். மறுபுறம் சர்வதேச அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான சமவாய சட்டத்தின் 3ஆவது பிரிவை மீறியுள்ளார்.

ஆகவே இந்த இரண்டு காரணிகளையும் முன்னிலைப்படுத்தி அவர் கைது செய்யப்பட வேண்டும். இந்த சம்பவம் தொடர்பில் எவரும் முறைப்பாடளிக்கவில்லை என அரசாங்கம் குறிப்பிடுகின்றது.

ஆகவே நாடாமளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு எதிராக நாங்கள் இன்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடளிப்போம் என குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *