சட்ட நடவடிக்கை எடுக்க தயங்கும் ஐக்கிய நாடுகள் சபை


ஐக்கிய நாடுகள் சபை வலுவான அல்லது ஆக்க பூர்வமான தீர்மானங்களை கொண்டு வந்து இலங்கை அரசாங்கத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு மனித உரிமை மீறல்களுடன் சம்மந்தப்படவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதும் எமது மக்களின் கோரிக்கையாகவும் ஆவலாகவும் உள்ளது.

ஆனாலும் ஐ.நா சபையிலே தீர்மானங்கள் வருகின்ற போதேல்லாம் இலங்கை அரசாங்கம் ஐ.நா சபையை ஏமாற்றுகின்ற வகையிலே காலங்கள் கொடுக்கப்பட்டாலும் அவற்றை நடை முறைப்படுத்தாது தொடர்ந்தும் கால நீடிப்பை பெறுவதற்கான உத்திகளை கையாண்டு வருகின்றது.

அதற்கு ஏற்ற வகையில் ஐ.நா சபையும் அவர்களுக்கு வாய்பை வழங்கும் விதமாகவே நடந்து கொள்கின்றார்கள்.

இதனால் தமிழ் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மீதான நம்பிக்கை குறைந்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் வைத்து நேற்று (18) மாலை கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

இம் முறையும் ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட அறிக்கை வலுவான காட்டமான அறிக்கையாக காணப்பட்டாலும் அதையும் இந்த இலங்கை அரசாங்கம் ஏமாற்றுகின்ற நிலை தொடர்சியாக காணப்படுகின்றது.

இந்த ஐ.நா சபையானது கடந்த காலத்திலும் கால நீட்டிப்பை பெற்று தங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதை சர்வதேசத்திற்கு நிறுபித்திருக்கின்றது.

எனவே தொடர்சியாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கைகளை வெளியிடுவதை நிறுத்தி விட்டு அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

அதே நேரம் இந்தியாவும் இலங்கையில் 13 ஆம் திருத்த சட்டத்தை நடை முறைப்படுத்துமாறு தெரிவித்துள்ளது.

ஆனாலும் இலங்கை அரசாங்கம் இதை நடை முறைப்படுத்துவதை விடுத்து சர்வதேசத்தை ஏமாற்றும் விதத்தில் செயற்படுவதுடன் ஐக்கிய நாடுகள் சபையில் நேரடியாக சாட்சியம் வழங்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள்,மற்றும் காணி ஆக்கிரமிப்பு,மனித உரிமை மீறல் விடயங்கள் தொடர்பான சாட்சியங்களை வலுவற்றதாக மாற்றுகின்ற விதத்தில் ஐ.நா வை ஏமாற்றி வருகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு எதிராக காட்டமான அற்றிக்கைகளை வெளியிடும் போது தமிழ் மக்களுக்கு ஆறுதலாக இருந்தாலும் அவை நடை முறை படுத்தப்படாத பொழுது அவர்கள் ஏமாற்றம் அடைக்கின்றனர்.

எனவே இந்த நிலை மாற வேண்டும் என்றால் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டவர்களை சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும் என்பதுடன் தமிழ் மக்களின் நியாயமான தீர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *