விகாரையை அகற்று – தையிட்டியில் தொடரும் போராட்டம்


தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமானது இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்றது.

இன்று (30.08.2023) போயா தினத்தில் திஸ்ஸ விகாரையில் வழிபாடுகள் நடாத்துவதற்கு சிங்கள பௌத்தர்கள் வருகை தந்தமைக்கு எதிர்ப்புத் தொரிவித்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இராணுவ வாகனத்தில் சிவில் உடைகளில் வந்தவர்கள் குறித்த விகாரைக்குள் சென்று வழிபாடுகளை முன்னெடுத்தனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் சட்டவிரோத விகாரைக்கு காவல், தையிட்டி மண் தமிழர் சொத்து, சட்டவிரோத விகாரையை உடனே அகற்று, இந்த மண் எங்களின் சொந்த மண், வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், ஆயுதங்களுக்கு அடிபணிய மாட்டோம் என்றும், அடாவடிகளுக்கு அடிபணிய மாட்டோம், இனப்படுகொலை இராணுவமே வெளியேறு, சட்டவிரோத திஸ்ஸ விகாரையை உடனே அகற்று” என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *