யாழில் பிரபல பெண்கள் பாடசாலையில் மாணவிகளிற்கு பாலியல் தொந்தரவு
வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பிரபல பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியரால் மாணவிகள் சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இது தொடர்பில் பாடசாலை அதிபரிடம் முறையிட்ட மாணவியொருவர் பாடசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயர்தர வகுப்பில் வர்த்தக பிரிவில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே மாணவிகளிற்கு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பாதிக்கப்பட்ட மாணவியொருவர் பாடசாலை அதிபரிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து, மாணவியை வேறு பாடசாலைக்கு மாற்றுவதென்றால் மாற்றுங்கள் என பெற்றோரிடம், அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து மாணவி, வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பிறிதொரு பாடசாலையில் இணைந்துள்ளார்.
ஏற்கனவே வலிகாமம் வலயத்தில் உள்ள உடுவில் மகளீர்கல்லுாரியில் 2016ம் ஆண்டும் அதிபரை மாற்றுவதற்கு எதிராக மாணவிகளால் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஏ.எல் வர்த்தகப் பிரிவில் கல்வி கற்பிக்கும் பிரபல ரியுசன் வாத்தியாரின் பாலியல் லீலைகள் தொடர்பாக மாணவிகள் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.