இந்தியாவிலிருந்து வந்த இலங்கையர் விமான நிலையத்தில் கைது
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெருந்தொகையான போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உப பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (18) இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய வருகை முனையத்தில் கைது செய்யப்பட்ட நபரின் பயணப்பொதிகளை சோதனை செய்ததில், 34 கிலோகிராம் மொத்த எடையுள்ள 60,460 போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த மாத்திரை பொதுவாக நரம்பு தொடர்பான சிகிச்சைகளுக்கு பயன்படுகிறது. இருப்பினும், இது ஹெராயினுக்கு மாற்றாக போதைக்கு அடிமையானவர்கள் மத்தியில் இது பிரபலமாகியுள்ளது.
தலை முடிக்கான நிறப்பூச்சு பக்கற்றுகளுக்குள் இந்த கடத்தல் பொருட்கள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேகநபர் திகன, ரஜவெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான ஒருவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்திய பின்னர், அவரை மேலதிக விசாரணைகளுக்காக ஏழு நாட்கள் தடுப்பு காவலில் வைக்க காவல்துறையினர் அனுமதி பெற்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.