பிரபாகரன் உயிரிழந்துவிட்டார் என ஏன் நிரூபிக்க முடியவில்லை
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால் டி.என்.ஏ பரிசோதனை மூலம் ஏன் அதனை உறுதி செய்யவில்லை?
என தமிழத் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்று உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று கூறியிருந்தார்.
இந்நிலையில், பழ.நெடுமாறனின் அறிவிப்பு குறித்து சிவாஜிலிங்கம் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்ற ஒரு செய்தியை தஞ்சாவூரில் வைத்து
பழ.நெடுமாறன் கூறியதாக ஊடகங்கள் மூலமாக நான் அறிந்து கொண்டேன். தேசிய தலைவர் கொல்லப்பட்டார் என அரசாங்கம் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி அறிவித்து,
அவரது உடலையும் காட்டியபோது கூட, உடனடியாகவே நாம், அதாவது மே 20ம் திகதி சென்னையில் பழ.நெடுமாறன் தலைமையில் பாரிய ஊர்வலத்தை நடத்தினோம்.
அதில் ம.தி.மு.க. நிறுவுனர் தலைவர் வைகோ, பா.ம.க. நிறுவுனர் டாக்டர் ராமதாஸ், நான் உட்பட பலர் கலந்து கொண்டோம்.
அந்த பேரணியில் வைத்து நான் கூறியிருந்தேன், இது அவருடைய உடல் அல்ல என்று உறுதிப்படத் தெரிவித்திருந்தது மாத்திரமல்ல,
முடிந்தால் டி.என்.ஏ பரிசோதனை மூலம் நிரூபிக்குமாறு இலங்கை அரசுக்கு சவால் விடுத்திருந்தேன்.
இதே கருத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றத்திலும் ஊடகச் சந்திப்பிலும் கூறியிருந்தேன்.பல தடவைகள் மீண்டும் மீண்டும் கூறிவிட்டேன்.
டி.என்.ஏ பரிசோதனையை முடிந்தால் செய்யுங்கள் அல்லது மரண சான்றிதழை வழங்குங்கள் என்று தெரிவித்தேன்.
ஆனால் இலங்கை அரசு அதைச் செய்யவில்லை. இந்தியாவிலே தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஒரு வழக்குக்காக தேடப்படுகின்றார் என்றால்
அதற்கு ஒரு மரண சான்றிதழை கூட இலங்கை அரசாங்கத்தால் வழங்கமுடியவில்லை என்றால் அதனுடைய பின்னணி என்ன என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.