பேருந்தை ஓடிக் கொண்டிருந்த சாரதி மீது தாக்குதல் – வீதியால் சென்ற பெண் பலி, மகன் படுகாயம்
பேருந்து ஓடிக் கொண்டிருந்தபோது பேருந்துக்குள் மதுபோதையில் அட்டகாசம் செய்த கும்பல் பேருந்து சாரதியை தாக்கியதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியால் சென்றவர்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் மாத்தறையிலிருந்து – கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் இடம்பெற்றிருக்கின்றது. கடந்த 16ஆம் திகதி இரவு 9.00 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெவிநுவர பிரதேசத்தைச் சேர்ந்த பாலதந்திரிகே குசுமலதா (68) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளதுடன் 47 வயதுடைய அவரது மகன் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் மூவரைக் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.