மூன்றரை கோடி ரூபா மோசடி செய்த போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிலையங்கள்


இந்த வருடத்தின் கடந்த 11 மாதங்களில் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து சுமார் மூன்றரை கோடி ரூபா (34,174,000) மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த தொகை பாரிய அதிகரிப்பு எனவும் கடந்த வருடம் 8,945,900 ரூபா பெறப்பட்டுள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிகமான தொகையை அறவீடு செய்தமை, பணம் செலுத்தி வேலை வழங்காமை, மற்றும் வெளிநாடு சென்ற பிறகு திட்டமிட்டபடி வேலை வழங்காததால் இலங்கை திரும்ப வேண்டிய நிலையில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடுகள்
இந்தக் காலப்பகுதியில் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த 1,080 முறைப்பாடுகளில் 614 முறைப்பாடுகள் பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராகப் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, சட்டவிரோதமாக செயல்பட்டதாக உறுதி செய்யப்பட்ட 13 நிறுவனங்களின் தொழிலாளர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், முறைப்பாடுகளின் படி பல நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட உள்ளதுடன், சட்டவிரோதமாக செயல்பட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் 26 சோதனைகளில் 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறைக்கு கிடைக்கப்பெற்ற 875 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன் 205 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *