சீனாவின் ஒப்பந்ததை மறுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
சீனாவுடன் விவசாயம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஊடாக பீய்ஜிங்கின் மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் இருப்பதாகக் கருதியே இந்த மறுப்பை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான விரிசல் தீவிரமாகியுள்ளதாக இந்தியச் செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
சீனா நேரடியாகவும், மறைமுகமாகவும் கடல் வெள்ளரியின் ஊடாக வடக்கின் கடல் பகுதிகளை ஆக்கிரமித்து, அங்குள்ள மீனவர்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோன்று வடக்கின் வளமான நிலங்களை அபகரிக்கும் வகையில் சீனாவின் இந்த திட்டம் அமையலாம் என்று கருதுகோளின் அடிப்படையிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழகம், இந்த ஒப்பந்தத்துக்கு உடன்பட மறுத்துள்ளது.
இதேவேளை, பொது மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட வேண்டாம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்தநிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்தமைக்காக மாணவர் சங்கம் தமது உபவேந்தருக்கு நன்றியையும் தெரிவித்துள்ளது.
சீனாவின் அணுகுமுறையின் அடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள வளமான விவசாய நிலங்களையும் கடற்பரப்பையும் சீனாவிற்கு விற்பனை செய்ய இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பீய்ஜிங்குடன் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாக மாணவர் சங்கம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.