ஆற்றில் குதித்த இளம் காதல் ஜோடி – யுவதி சடலமாக மீட்பு
கம்பஹா மினுவங்கொடை ஓபாத, சமுர்த்திகம பிரதேசத்தின் ஊடாக ஓடும் தெதுருஓயா ஆற்றின் கிளை ஆற்றில் இளம் ஜோடி குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆற்றில் குதித்த இருவரில் யுவதியின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக மினுவங்கொடை பொலிஸார் கூறியுள்ளனர். மினுவங்கொடை யட்டியன பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான கே.லக்சானி தில்மிக்கா கீர்த்திரத்ன என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மினுவங்கொடை சமுர்த்திகம நுககஹாமுல்ல பாலத்திற்கு அருகில் நேற்று உரிமையாளர் இல்லாத மோட்டார் சைக்கிள் கிடந்துள்ளது. அது குறித்து பிரதேசவாசிகள் கிராம சேவகருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஆற்றில் குதித்துள்ளனரா என்று தேடி பார்த்த போது யுவதியின் சடலம் கிடைத்துள்ளது.
சடலமாக மீட்கப்பட்டுள்ள யுவதி, 7 மாதங்களுக்கு முன்னர் பெற்றோரின் விருப்பமின்றி வீட்டில் இருந்து வெளியேறி, இளைஞர் ஒருவருடன் நேதகமுவ பிரசேதத்தில வீடொன்றில் வசித்து வந்துள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
யுவதியின் மரணம் தொடர்பான திடீர் மரண விசாரணைகள் இன்று மதியம் நடத்தப்பட்டன. இதனையடுத்து சடலம் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறைக்கு கொண்டு செல்லுமாறு திடீர் மரண விசாரணை அதிகாரி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பிரேதப்பரிசோதனை மற்றும் மேலதிக திடீர் மரண விசாரணைகள் நாளைய தினம் வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளன. இந்த நிலையில், மினுவங்கொடை பொலிஸாரும், பிரதேசவாசிகளும் இணைந்து இளைஞனின் சடலத்தை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.