சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல் – 6 பெண்கள் கைது
அநுராதபுரம், புபுதுபுர பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு நேற்று (16) புபுதுபுர பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 14 கிராம் 220 மில்லிகிராம் ஹெரோயினுடன் நான்கு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல தயாரான போது, அவ்விடத்திற்கு வந்த சந்தேக நபர்களின் உறவினர்கள் 6 பேர் பொலிஸ் உத்தியோகத்தர்களை கற்களால் தாக்கியுள்ளனர்.
காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை, சட்டவிரோதமான ஒன்று கூடியமை மற்றும் கற்களால் தாக்கி காயங்களை ஏற்படுத்திய குற்றங்களுக்காக குறித்த ஆறு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (17) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.