அரச ஊழியர்களை பதவி நீக்கம் செய்ய திடடம்
அரச துறையில் உள்ள 15 இலட்சம் பணியாளர்களின் எண்ணிக்கையை அரச நிர்வாகத்தால் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் உள்ளதன் காரணமாக அரச நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்படும் அல்லது அரச பணியாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டு பதவி நீக்கம் செய்ய நேரிடும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இந்தநிலையில், வெற்றிடமாகியுள்ள அத்தியாவசிய அரச சேவைகளுக்கான நியமனங்களை வழங்க முடியாத நிலை உள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் (16) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான பணியை அரசாங்கத்தினால் மாத்திரம் தனித்து முன்னெடுக்க முடியாது. எதிர்க்கட்சியும், ஆளும் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே நெருக்கடியான சூழலை வெற்றிக் கொண்டு நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும். நாடு எதிர்க்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து இலகுவில் விடுப்பட முடியாது.
ஆளும் மற்றும் எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும். ஏற்கனவே இடம்பெற்ற சம்பவங்களை மாத்திரம் சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தால் ஒருபோதும் தீர்வு காண முடியாது. அரசியல் கட்சிகள் அனைவரும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும். தேசிய பிரச்சினை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் சபையில் உரையாற்றினார்.
தேசிய பிரச்சினை தொடர்பில் காலம் காலமாக பேசப்படுகிறது. தேசிய பிரச்சினைக்கு இந்த அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண முடியும். தற்போதைய நாடாளுமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் உள்ளார்கள். தேசிய பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்கு அறிவார்.
கட்சியை பலப்படுத்துவதை விட தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கம் இவர்களுக்கு உள்ளது. தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தமிழ் அரசியல் தரப்பினரும் ஒருசில விடயங்களில் விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க வேண்டும்.
சிறைச்சாலையில் பல ஆண்டு காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆகவே கூட்டமைப்பினர் நம்பிக்கையுடன் இலங்கை பிரஜைகள் என்ற அடிப்படையில் செயற்பட வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தேசிய உற்பத்திகளை மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்கள்.
இவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். வடக்கு மாகாணத்தில் உழுந்து பயிர்ச் செய்கை அதிகளவில் இடம்பெறுகின்றது. சகோதரத்துவத்துடன் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நாட்டை முன்னேற்ற முடியும். அரச வருமானத்தை தடுக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தப்பட்டால் நாட்டில் மீண்டும் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும்.
போராட்டங்கள் சுற்றுலாத்துறை மற்றும் கைத்தொழில்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைய கூடாது. சுற்றுலாத்துறை மற்றும் கைத்தொழில்கள் மேம்படுத்தப்பட்டால் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும். நாட்டுக்கு டொலர் அனுப்ப வேண்டாம், அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என அரசியல்வாதிகள் குறிப்பிடுவதை நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் குறிப்பிடப்படும் கருத்துக்கள் நாட்டுக்கு செய்யும் துரோகமாக கருதப்படும். ஒரு சில அரச நிறுவனங்களை ஒன்றிணைக்க வேண்டும் அல்லது நட்டஈடு வழங்கி அரச பணியாளர்களை குறைக்க நேரிடும். மறுபுறம் அத்தியாவசிய அரச பதவிகளில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.
வெற்றிடமாக உள்ள அரச பதவிகளுக்கான நியமனங்களை கூட வழங்க முடியாத அளவில் நிதி நெருக்கடி உள்ளது. இந்தநிலையில், அரச சேவை தொடர்பில் பேச்சுவார்த்தை ஊடாக உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.