மட்டக்களப்பில் தூக்கில் தொங்கி மூவர் பலி


மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 48 மணி நேரத்தில் மாணவி உட்பட மூவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறில் 22 வயதுடைய சுரேஸ் விதுசன் என்னும் இளைஞன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதேபோன்று கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்தில் பாலிப்போடி நவரெத்தினம் என்னும் 64 வயதுடைய நபர் தனது கொட்டிலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அத்துடன் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சந்தீவு பகுதியில் உள்ள வீட்டில் ஞா.டிலானி என்னும் கல்வியல் கல்லூரி மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதி ரஞ்சித்குமார் மற்றும் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி பீற்றர்போல் ஆகியோரின் உத்தரவுக்கு அமைவாக மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் ஆகியோர் சடலங்களை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் சடலங்களை ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை, வவுணதீவு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மைக்காலகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *