கொழும்பில் பிரபல உணவகத்தின் உணவு பொதியில் புழு
நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபை,அதன் அதிகாரிகளுக்கு கொழும்பில் நடத்திய கருத்தரங்கொன்றுக்கு இலங்கையின் பிரதான உணவகத்திடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மதிய உணவில் புழு மற்றும் பிளாஸ்டிக் துண்டுகள் காணப்பட்ட சம்பவம் தொடர்பாக கொழும்பு மாநகர சபை வழக்கு தொடர நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் சாந்த நிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பு யூனியன் பிளேஸில் உள்ள உணவகம்
கொழும்பு யூனியன் பிளேஸ் பிரதேசத்தில் உள்ள உணவகத்தில் இந்த மதிய உணவு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் சில உணவு பொதிகளில் பொலிதீன் துண்டுகள் காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
நுகர்வோர் விவகாரங்கள் தொடர்பான அதிகார சபையின் அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு நாட்கள் கொழும்பில் கருத்தரங்கொன்று நடத்தப்பட்டது.
அதில் கலந்துக்கொண்டவர்களுக்கு வழங்க குறித்த உணவகத்திடம் இருந்து 150 உணவு பொதிகள் பெறப்பட்டிருந்தன.
அந்த உணவு பொதிகளில் மூன்று உணவு பொதிகளில் புழுக்களும், பிளாஸ்டிக் துண்டுகள் மற்றும் பொலிதீன் என்பன காணப்பட்டதால், கருத்தரங்கில் கலந்துக்கொண்ட அதிகாரிகள் உடனடியாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பரிசோதித்து அதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.
பின்னர் சம்பந்தப்படட உணவகத்திற்கு சென்று பரிசோதனை நடத்தியுள்ளனர். பரிசோதனைகளின் பின்னர், அந்த உணவகத்திற்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.