பொலிஸ் சார்ஜன்ட் அடித்து கொலை – 14 பேர் கைது
அநுராதபுரம், கெப்பித்திகொல்லாவ, ரம்பகெப்புவெவ பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது பொதுமக்கள் தாக்குதலில் படுகாயமைடைந்த பொலிஸ் சார்ஜன் ட் உயிரிழந்துள்ளார் என்று கெப்பித்திகொல்லாவ தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பௌத்த பிக்கு உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கெப்பித்திக்கொல்லாவ பகுதியில் நேற்று (31) மாலை காட்டு யானை தாக்கியதில் ரம்பகெப்புவெவ திட்டகோனேவ பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தையான பி.குணசிங்க (வயது 48) என்ற விவசாயி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் யானைப் பிரச்சினையைத் தீர்க்குமாறும் வலியுறுத்தி பௌத்த பிக்கு உள்ளடங்கலாக 100க்கும் மேற்பட்ட பிரதேச வாசிகள் ரம்பகெப்புவெவ பகுதியில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கெப்பித்திக்கொல்லாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் மீது பொதுமக்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காகவும் தாக்குதலுக்கு இலக்காகிய பொலிஸ் அதிகாரியை மீட்பதற்காகவும் வானை நோக்கி பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில், வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை ஏ.பி.சுனில் (வயது 54) என்ற பொலிஸ் சார்ஜன் காயமடைந்து, கெப்பித்திக்கொல்லாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கும் பின்னர் மதவாச்சி வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பொலிஸ் சார்ஜனின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.