வவுனியாவில் துவிச்சக்கர வண்டி மீது பேரூந்து மோதி விபத்து – முதியவர் பலி
வவுனியா, வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் இ.போ.சபை பேரூந்தும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் இன்று (15) மாலை 5.40 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து மாலை 5.30 இற்கு மன்னார் நோக்கி புறப்பட்ட இ.போ.சபை பேரூந்து பயணிகளை ஏற்றுவதற்காக வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியூடாக குடியிருப்பு நோக்கி சென்ற போது, வைத்தியசாலை வீதியில் இருந்து குடியிருப்பு நோக்கி திரும்பிய துவிசக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். மரணமடைந்தவர் வவுனியா, வெளிக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தையா தவராசா (வயது 65) என்பவராவார். விபத்தையடுத்து இ.போ.சபை சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.