அரசாங்க வேலை பெற்றுக் கொடுப்பதாக கூறி மோசடி – இரு பெண்கள் கைது
அரச வேலை பெற்றுக் கொடுப்பதாக கூறி இளைஞர், யுவதிகளிடம் பணம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் ஆசிரியை ஒருவர் உட்பட இரு பெண்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து, ( இன்று 15-10-2022) ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெல ஊடகங்களுக்கு கருத்து தொிவித்தபோது, குறித்த ஆசிரியையை இடைநிறுத்தம் செய்துள்ளதாகவும்,
இது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். பதுளைப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியை உட்பட இரு பெண்கள் இணைந்து , தொழிலற்று இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு
அரச தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக்கூறியே மேற்படி பண மோசடி செய்யப்பட்டுள்ளதாகும்.
தொழில் திரமைளுக்கமைய இரண்டு இலட்சங்களிலிருந்து ஆறு இலட்சம் ரூபாவரை பணம் பெறப்பட்டது.
அந்த வகையில் பணம் பெறப்பட்டதும் அரச இலச்சினை பொறிக்கப்பட்டவகையில் தொழில் நியமனப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
அந்நியமனப்பத்திரங்கள் வழங்கப்பட்டவர்களுக்கு, குறிப்பிட்ட ஆசிரியையினால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளினால் நியமனங்கள் வழங்குவதற்கு காலதாமதமாகலாமென்று தொலைபேசி மூலம் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளன. வழங்கப்பட்டிருக்கும் தொழில் நியமனப்பத்திரங்களும் போலியானவைகளென்று பொலிசார் தெரிவித்தனர்.
நீண்டகாலமாக, மேற்படி மோசடிகள் இடம்பெற்றுவருவதாக பணம்கொடுத்து ஏமாற்றமடைந்த இளைஞர் , யுவதிகள் பொலிசாரிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஆசிரியை உள்ளிட்ட இருவரிடம் விசாரணைகள் நிறைவுற்ற பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்களென, விசாரணைகளை மேற்கொண்டு வரும் பிரதேச பொலிஸ் அதிபர் தெரிவித்தார்.