மலையக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


மத்திய மலை நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு அடை மழை பெய்து வருகிறது.

நீர் போசன பிரதேசங்களில் பதிவாகி அதிக மழை வீழ்ச்சி காரணமாக நேற்றைய தினம் கெனியோன் நீர்த்தேக்கத்தில் இரண்டு வான் கதவுகள் சுமார் 6 அங்குலம் வரை திறந்து விடப்பட்டன.

இதே நேரம் நோட்டன்பிரிஜ் பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் அனைத்திலும் நீர் வான் பாய்ந்தன.

இந்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக களனி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் நீர்த்தேக்கத்திற்கு கீழ் தாழ் நிலப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர் தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக பல பிரதேசங்களில் மண் சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன.

இந்த மண் சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

சீரற்ற காலநிலையுடன் ஹட்டன் கொழும்பு மற்றும் ஹட்டன் நுவரெலியா உள்ளிட்ட வீதிகளில் மண் திட்டுக்கள் சரிந்து வீழ்ந்துள்ளதுடன் அடிக்கடி கலுகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவல, வட்டவளை, ஹட்டன் குடாகம, கொட்கலை, தலவாக்கலை சென்கிளையார், ரதல்ல, நானுஓயா உள்ளிட்ட பல பகுதிகளில் பனிமூட்டமும் காணப்படுகின்றன .

இதனால் இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக செலுத்துமாறும் பனி மூட்டம் நிலவும் வேளையில் வானங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தவாறு வாகனங்களை செலுத்துவதன் மூலம் வீதி விபத்துக்களை தவிர்த்துக்கொள்ளலாம் என போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *