இலங்கையில் மிகத் தீவிரமாக பரவும் டெங்கு
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் ஆம் திகதி முதல் 3 ஆம் திகதி வரை விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் நிமல்கா பன்னில ஹெட்டி தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (25) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த வைத்தியர் நிமல்கா பன்னில ஹெட்டி, குறித்த பிரதேசங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
கடந்த மாதம் 11 ஆயிரத்து 500 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டிருந்ததுடன் ,ஒகஸ்ட் மாதத்தில் 5 ஆயிரத்து 600 ஆக குறைவடைந்துள்ளது.
இருப்பினும் எதிர்வரும் காலங்களில் பருவமழையினால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படலாம் எனவும் வைத்தியர் நிமல்கா பன்னில ஹெட்டி தெரிவித்தார்.
மேலும் கூறுகையில் ,டெங்கு தடுப்பு வேலைத்திட்டங்களின் போது பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் ஆதரவைப் பெற்றாலும் டெங்கு பரவும் இடங்களை சுத்தம் செய்வதும், அந்தந்த குடியிருப்புகளுக்கு அருகாமையில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளை கண்காணிப்பதும் பொது மக்களின் பொறுப்பாகும். அதிக பங்காற்றுவதன் மூலமே டெங்கு நுளம்புகள் பரவுவதைக் குறைக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
தனியார் மற்றும் அரச அலுவலக கட்டிடங்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கட்டுமானத் தளங்களுக்கு அருகாமையில் அதிகளவில் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அவதானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த ஆண்டு முழுவதும் 36 ஆயிரம் டெங்கு தொற்றாளர்கள் மட்டுமே பதிவாகியிருந்தனர். இருப்பினும் 2022 ஆண்டு ஆரம்பத்தில் இருந்து இன்று வரையில் 52 ஆயிரத்து 500 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் எனவும் கூறினார்.
அத்துடன் அதிகாரிகள் தொடர்ந்து பொதுமக்களுக்கு டெங்கு தொற்று தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் நுளம்புகள் பெருகும் இடங்களை சுத்தம் சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் பொது மக்களின் ஆதரவின்றி அடுத்த நான்கு மாதங்களில் இந்த எண்ணிக்கையை குறைக்க முடியாது என்றும் வைத்தியர் நிமல்கா பன்னில ஹெட்டி மேலும் தெரிவித்தார்.