ஆசிரியர் – அதிபர்கள் போராட்டம்
சம்பள முரண்பாட்டை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளன.
இதன் முதற்கட்டமாக கண்டி நகரில் இன்று (20) பிற்பகல் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
“ஆசிரியர், அதிபர் பதவி உயர்வுகள் தொடர்பாக எந்த வேலைத்திட்டமும் இல்லை.அவர்கள் கடும் நெருக்கடியில் உள்ளனர். ஆசிரியர் பதவியில் இருந்து அதிபர் வரை செல்லும் போது சம்பளம் குறைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த கல்விமுறை பிரச்சனைகள் குறித்து கல்வி அதிகாரிகள் கவனம் செலுத்துவது இல்லை. தினமும் கலந்துரையாடல்கள் மட்டுமே. எனவே, ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு கோரி பாரிய தொடர் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கின்றோம்.
பிற்பகல் 2 மணிக்கு கண்டியில் முதல் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். எமது செய்தியை அரசு உடனடியாக புரிந்து கொள்ள வேண்டும் . ஆசிரியர் அதிபர் கூட்டமைப்பின் கீழ் ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், பிரிவெனா ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து, அரசுக்கு செய்தி அனுப்ப, கூட்டு போராட்டத்தை ஆரம்பிக்கின்றோம். பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க வேண்டும், இல்லையெனில் எதிர்காலத்தில் பல்வேறு தொழில்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்” என்றார்.