14 வயது பாடசாலை மாணன் கார் மோதி உயிரிழப்பு
பாணந்துறை மலமுல்ல பொக்குண சந்தியில் துவிச்சக்கரவண்டியை நிறுத்திக்கொண்டிருந்த 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் இன்று (11) கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பாணந்துறை பின்வல பகுதியைச் சேர்ந்த விஹாகா சதேவ் டி சில்வா என்ற 14 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவன் பாணந்துறை ராஜகீய வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவன் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மாலமுல்ல கிராமிய வங்கிக்கு முன்பாக உள்ள வீதிக்கு அருகில் தனது துவிச்சக்கர வண்டியை நிறுத்திய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற , ‘எல்’ அட்டை பொருத்தப்பட்ட காரே வீதியை விட்டு விலகி, மாணவனின் மீது மோதியது. விபத்தில் படுகாயமடைந்த மாணவன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் காரை செலுத்திச் சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றிருந்தாலும், முறையாக வாகனம் ஓட்டுவதற்கு பயிற்சி பெறாததால், காரின் இரு புறமும் ‘எல்’ தகடு போட்டு வாகனம் ஓட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.