இலங்கை முழுமையாக முடங்கும் சாத்தியம்
இலங்கையில் எதிர்வரும் 28ஆம் திகதி பல அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரியவருகிறது.
இந்த விடயத்தை இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ரயில்வே தொழிற்சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் 27ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் 28ஆம் திகதி நள்ளிரவு வரையில் இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பிரதான தொழிற்சங்கள் பலவும் தமது ஆதரவை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மகாநாயக்க தேரர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை அமுல்படுத்தாவிட்டால் அடுத்த வாரம் நாடு தழுவிய ரீதியில் பேருந்து சேவை புறக்கணிப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரித்துள்ளார்.
நடப்பு அரசாங்கத்திடம் பொருளாதாரத்தை மீட்பதற்கான சரியான திட்டம் எதுவும் இல்லாத நிலையில், அரசாங்கத்தை முன்னோக்கி நகர்த்த முடியவில்லை. இதனால் ஏனைய துறைகளை போன்று பேருந்து துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வாரத்தில் ஏனைய சங்கங்களுடன் பேச்சு நடத்தி தீர்மானத்தை நிறைவேற்றவுள்ளதாக கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் எதிர்வரும் 28ஆம் திகதி போக்குவரத்து துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள நிலையில் நாட்டில் பொதுப் போக்குவரத்து துறை முடங்கும் சாத்தியம் காணப்படுவதாக சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரியவரும் நிலையில் இலங்கை முழுவதும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளனர்.