2 ம் உலகப்போருக்கு பிறகு ஜெர்மனியின் நாஜி படைகளால் கைவிடப்பட்ட சுமார் 1 டன் ரசாயன ஆயுதங்கள் பால்டிக் கடலின் அடியில் புதைந்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
தவிர்க்க முடியாத கடல் அரிப்பின் காரணமாக இந்த ரசாயன ஆயுதங்கள் மாபெரும் சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தும் அபாயகரமான சூழல் உருவாகி உள்ளது.
போலந்தை சேர்ந்த அறிவியல் அகாடமி நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்துள்ளதோடு இதுதொடர்பாக போலாந்தின் பிரபல செய்தித்தாள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பால்டிக் கடற்பரப்பில் குவிக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள், பீப்பாய்கள் மற்றும் குண்டுகள் உள்ளிட்ட ஆயதங்களின் சரியான அளவை மதிப்பிடுவது கடினம் என்றாலும் அவை 40,000 முதல் 100,000 டன் வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இவை இயற்கைக்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்துவதற்கு தயாராக உள்ளன. குறிப்பாக கடலுக்கு அடியில் இருக்கும் வாயு வெடிகுண்டுகள் 70 மீட்டர் சுற்றளவு வரை தண்ணீரை மாசுபடுத்துவதோடு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களையும் கொல்லும் என ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
மேலும் 2ம் உலகப்போரின் முடிவுக்கு பிறகு அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சோவியத் யூனியனை உள்ளடக்கிய முத்தரப்பு ஆணையத்தின் முடிவின்பேரில் நாஜி படைகளால் கைவிடப்பட்ட ரசாயன ஆயுதங்கள் பால்டிக் கடலில் புதைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.