யாழ்.கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகன சாரதி மீது பொலிஸார் தாக்குதல்
யாழ்.கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வாகன சாரதி ஒருவரை பொலிஸார் தாக்கிய சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றிருக்கின்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக் கிழமை டீசல் பெறுவதற்கு சுமார் 100ற்கும் மேற்பட்ட வாகனங்கள் காத்திருந்தன.
எனினும் அவற்றில் பெரும்பலான வாகனங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் பங்கீட்டு அட்டை இல்லை. ஆனாலும் எரிபொருள் வழங்க கோரியதால் பொலிஸாருக்கும் சாரதிகளுக்குமிடையில் தர்க்கம் மூண்டது.
மேலும் எரிபொருள் பங்கீட்டு அட்டையினை தாங்கள் கிராமசேவகரிடம் கோரியபோதும் தமக்கு வழங்கப்படவில்லை. அதற்கு காரணம் கேட்டபோது கிராமசேவகர் எதிர்வரு் செவ்வாய் கிழமையே தமக்கு கிடைக்கும் எனவும்,
அதன் பின்னரே எரிபொருள் அட்டையினை வழங்க முடியும். என கிராமசேவகர் கூறியதாக சாரதிகள் கூறினர். மேலும் தங்களிடம் பங்கீட்டு அட்டை இல்லாத நிலையில் மாவட்டச் செயலகம் அறிவித்த பிரகாரம்,
வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்க அடிப்படையில் தமக்கு எரிபொருள் வழங்கும்படி தாம் கேட்டதற்கு பொலிஸாரும், எரிபொருள் நிரப்பு நிலையத்தாரும் மறுத்ததாகவும் சாரதிகள் கூறினர்.
இதனால் பொலிஸாருக்கும் சாரதிகளுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்த நிலையில் அங்கு நின்ற சாரதி ஒருவரை பொலிஸார் சட்டையை பிடித்து இழுத்து தாக்கியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த இடத்துக்கு வருகை தந்த நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர் ஒருவர் வாகன சாரதிகளுடன் கலந்துரையாடிய நிலையில் நிலைமை சுகமான நிலைக்கு வந்தது.