குருந்தூர் மலையில் உள்ள விகாரை கட்டுமானங்களை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவு
குருந்தூர் மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறு பொலிஸாருக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றில் முல்லைதீவு நீதவான் நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதன்போது, இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிவான், முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை ஆதி சிவன் அய்யனார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறும், அது தொடர்பில் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
அத்துடன், குறித்த பகுதியில் ஆதி சிவன் அய்யனார் ஆலயத்தினர் தங்களுடைய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்த விதத்திலும் தடை விதிக்க கூடாது எனவும் குறித்த இடத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படாத வகையில் பொலிஸார் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் எனவும் நீதிவான் தமது தீர்ப்பில் அறிவித்துள்ளார்.
மேலும் குறித்த பகுதியானது தொல்லியல் திணைக்களத்தின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக காணப்படுவதால் அந்த பிரதேசம் தொடர்பான விடயங்களை ஆய்வு செய்து அது தொடர்பாக அறிக்கையிடுமாறு தொல்லியல் திணைக்களத்துக்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் கடந்த ஜூன் 12 ஆம் திகதி புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கும், அங்கு நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் விசேட பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், ஜூன் 16 ஆம் திகதி இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கினை நகர்த்தல் பத்திரம் மூலம், முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்துடன் இணைந்து நீதிவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
அந்தவகையில் குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் மற்றும் காவல்துறை தரப்பினரால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், வழக்குத் தொடுநரான பொலிஸார், குருந்தூர் மலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஜூன் 23க்கு திகதியிட்டிருந்தார்.
குருந்தூர்மலை தொடர்பான குறித்த வழக்கு, மீண்டும் மேற்படி திகதியில் விசாரிக்கப்பட்போது பொலிஸார் பூரணமான விளக்கத்தை அளிப்பதற்கு முடியாத சூழல்நிலையில் இருப்பதாகக்கூறி, கால அவகாசம் கோரியிருந்த நிலையில் வழக்கு ஜூன் 30 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டது.
இதனையடுத்து ஜூன் 30 ஆம் திகதி நீதிவான் ரி.சரவணராஜா முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டபோது இரண்டு தரப்பு வாதப்பிரதிவாதங்களை ஆராய்ந்த நீதவான், தீர்ப்புக்காக இன்றைய தினத்துக்கு திகதியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது