ஜனாதிபதி பதவிக்காக சதி திட்டம் தீட்டும் சரத்பொன்சேகா


ராணுவத்தின் ஒத்துழைப்புடன் நாட்டின் புதிய ஜனாதிபதியாகும் முயற்சிகளை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா சதி செய்து வருவதாக சிங்கள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபகக்ஷ பதவி விலகும் நிலையில் புதிய ஜனாதிபதி யார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இலங்கை அரசியல் சாசனப்படி ஜனாதிபதி பதவி விலகினால் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு ஒருவர் தற்காலிக ஜனாதிபதியாக்கப்பட வேண்டும் அல்லது சபாநாயகர் அப்பொறுப்பை ஏற்க வேண்டும்.

அதேநேரத்தில் இத்தனை பதற்றங்கள் நிலவுகிற போதும் இலங்கை ராணுவத்தின் கனத்த மவுனமும் அமைதியும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்தியாவில் இருந்து திரும்பிய இலங்கை ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நாட்டில் நிலவும் நெருக்கடியை அமைதியான முறையிலும், அரசியலமைப்பு முறையிலும் தீர்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே இத்தருணத்தில் நாட்டின் அமைதியைப் பாதுகாக்க படையினருக்கும் போலீசாருக்கும் தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த நிலையில் சரத்பொன்சேகாவின் கருத்துப்படியே இலங்கை ராணுவம் மிகவும் மென்மையான போக்கை கையாளுகிறது என்கின்றன சிங்கள ஊடகங்கள்.

கோட்டாபயவுக்கு எதிரான போராட்டத்தில் சரத்பொன்சேகாவும் பங்கேற்றிருந்தார். அவரது ஆலோசனைப்படியே இலங்கை ராணுவ தளபதிகள் செயல்படுவதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இலங்கை நாடாளுமன்றம் கூடி, ஜனாதிபதியாக ஒருவரை தேர்வு செய்யும் போது அது சரத் பொன்சேகாவாகத்தான் இருக்க வேண்டும் என் இலங்கை ராணுவம் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

ஆகையால் சரத்பொன்சேகாவைத் தவிர வேறு எவரும் ஜனாதிபதி தேர்வாக அமைந்துவிடக் கூடாது என்பதிலும் இலங்கை ராணுவம் கவனமாக இருக்கிறது என்கின்றன அத்தகவல்கள்.

இது தொடர்பாக தமது சகாக்களிடம் பேசிய சரத் பொன்சேகா, முற்றிலும் அராஜகமாகி விட்ட நாட்டைக் கைப்பற்றி நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் பொறுப்பை ஏற்கத் தயார் எனவும் கூறியிருக்கிறாராம்.

அத்துடன் நாடாளுமன்றத்திற்கு வெளியே இருக்கும் போராட்டக்காரர்களின் ஆதரவு தனக்கு கிடைக்கும் எனவும் போராட்ட களத்தில் சில அரசியல்வாதிகள் தாக்கப்பட்டாலும் தமக்கு ஆதரவும் பாராட்டும் கிடைத்தது எனவும் சரத்பொன்சேகா பெருமிதப்பட்டிருக்கிறாராம்.

மேலும் சரத்பொன்சேகா, இலங்கை ராணுவத்தின் இந்த கூட்டு சதிக்கு இலங்கைக்கு மிக வேண்டிய நாடு ஒன்று முழு ஆதரவைத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த நாட்டின் ஆதரவுடனேயே சரத் பொன்சேகா இக்கருத்துகளை பகிரங்கமாக கூறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *