இலங்கையில் பணவீக்கம் 70 சதவீதம் வரை அதிகரிக்கும் அபாயம்
தனது கணிப்பின் படி பணவீக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எதிர்வரும் சில மாதங்களினுள் பணவீக்கம் 70 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தற்போது மேற்கொண்டுள்ள கொள்கை அடிப்படையிலான செயற்பாடுகள் காரணமாக எதிர்வரும் 2023 ஆம் ஆண்டின் ஆரம்பம் முதலே பணவீக்கம் பாரியளவில் குறைவடைக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், உலகளவிலான எரிபொருள் விலை மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளின் வீழ்ச்சி தொடர்பிலான அனுமானங்கள் இந்த கணிப்பில் அடங்குவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்.
இதேவேளை, இந்நாட்டு அந்நிய செலாவணியை வலுப்படுத்துவற்காக பல நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, சர்வதேச நாயணச் சபையுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்களவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜூன் மாத இறுதியில் இந்நாட்டு உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 1,859 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.