யாழ்ப்பாணம் – கண்டி வீதியை முடக்கிய பொதுமக்கள்
யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக காத்திருந்தும் தமக்கு எரிபொருள் வழங்கப்படாமையால் கோபமடைந்த மக்கள் யாழ்ப்பாணம் – கண்டி வீதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பல நாட்களாக பொதுமக்கள் வரிசைகளில் காத்திருந்த நிலையில் நேற்றய தினம் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டிருந்தது.
இதனால் பெருமளவு மக்கள் அதிகாலை தொடக்கம் வரிசைகளில் காத்திருந்தமையினை அவதானிக்க முடிந்தது. இந்நிலையில் மாலையில் எரிபொருள் தீர்ந்ததால் விநியோகம் நிறுத்தப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் அரச ஊழியர்களுக்கு மட்டுமா எரிபொருள்? என குழப்பமடைந்த பொதுமக்கள் 3 நாட்களுக்கும் மேலாக எரிபொருளுக்கு காத்திருந்த தமக்கு எரிபொருள் வழங்கப்படவில்லை. என குற்றஞ்சாட்டி யாழ்ப்பாணம் – கண்டி வீதியை முடக்கி போராட்டம் நடத்தினர்.
இதன்போது தமக்கு முறையான எரிபொருள் விநியோகம் இல்லாமையால் தாம் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாக போராட்டம் நடத்தியவர்கள் சுட்டிக்காட்டியதுடன், அரச ஊழியர்களுக்கு காட்டும் அக்கறையை மாவட்ட மக்கள் மீதும் பொறுப்புவாய்ந்தோர் காட்டவேண்டும் என கூறியுள்ளனர்.