கசிப்பு குடிக்க பணம் கொடுக்காததால் இளம் பெண் குத்திக்கொலை


இரத்தினபுரி, எலபாத்த, மஹிரகல பிரதேசத்தில் 100 ரூபா கொடுக்காததால் பெண் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மயோனிகா பிரஷிலானி என்ற அந்த பெண்ணிற்கு இரண்டு மாதங்களின் முன்னரே திருமணமாகியிருந்தது.

கொலைச் சம்பவம் தொடர்பில் கெஹலோவிடகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 21 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.

எலபாத பிரதேசத்தில் குடிநீர் உற்பத்தி நிறுவனமொன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றும் அவர், பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் வழியில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அவரது கணவரும் அதே நிறுவனத்தில் சாரதியாக பணியாற்றுகிறார். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, அவர் நிறுவனத்திற்கு செல்லவில்லை.

ரூ.100 கொடுக்காததால் இளம் பெண் குத்திக்கொலை

கொலை நடந்த அன்று மதியம், குறித்த பெண்ணின் வீட்டில் இருந்து 500 மீற்றர் தொலைவில் உள்ள வெறிச்சோடிய இடத்தில் வீதியில் தங்கியிருந்த சந்தேக நபர், அவரிடம் 100 ரூபா பணம் கேட்டுள்ளார்.

எனினும் அதனை கொடுக்க மறுத்ததன் காரணமாக குறித்த பெண் கத்தியால் மூன்று இடங்களில் குத்தியதாக சந்தேக நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பின்னர் சந்தேக நபர் அந்த பெண்ணின் கையில் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

மனைவியின் தொலைபேசிக்கு கணவர் அழைப்பேற்படுத்திய போதும் பதில் கிடைக்கவில்லை. மனைவியை தேடிச் சென்ற போது, வீதியில் இரத்த வெள்ளத்தில் இருப்பதை அவதானித்து, உடனடியாக இரத்தினபுரி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார்.

எனினும், அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்பது பரிசோதனையில் தெரிய வந்தது.

கைதான சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

சந்தேக நபர் கசிப்புக்கு அடிமையானதும், கசிப்பு குடிக்க 100 ரூபா பணம் கேட்டதும், அந்த பெண் கொடுக்காததால் கொலை நடந்ததும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எலபாத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *