இலங்கையில் புதிய வரியால் அதிகரித்த பழங்களின் விலை


பெறுமதிசேர் வரி அதிகரிப்பு மற்றும் புதிய வரி திருத்தங்கள் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பழங்களின் சில்லறை விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, அப்பிள் ஒன்றின் விலை 200 ரூபாவாகவும், ஆரஞ்சு பழத்தின் விலை 120 ரூபாவாகவும், ஒரு கிலோ திராட்சை 1500 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் முதல் அமுலுக்கு வரும் வகையில் 8 வீதத்தில் இருந்து 12 வீதமாக வட் வரி அதிகரிக்கப்பட்டது.

மேலும் இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்ட 369 பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி பால், தயிர், வெண்ணெய், பாலாடைக்கட்டி, பேரீச்சம்பழம், ஆரஞ்சு, திராட்சை மற்றும் அப்பிள் உள்ளிட்ட 369 பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், அவற்றிற்கு விதிக்கப்பட்டுள்ள வரிகள் மற்றும் விதிமுறைகள் அமுலில் இருக்கும் எனவும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு சோக்லேட் மற்றும் கொக்கோ அடங்கிய உணவுகள், தானியங்கள், பழச்சாறுகள், குடிநீர் மற்றும் மது அல்லாத பானங்கள், வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், பாதணிகள் மற்றும் தொப்பிகள், பீங்கான் மேசைப் பொருட்கள், கண்ணாடிப் பொருட்கள், குளியலறை பாகங்கள், குளிரூட்டிகள் மற்றும் குளிர்சாதன பெட்டிகள், இலத்திரனியல் பொருட்கள் தளபாடங்கள் மற்றும் கையடக்க தொலைபேசிகள், இசைக்கருவிகள், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் போன்ற பொருட்களின் மீதான இறக்குமதி வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தவிர, இறக்குமதி செய்யப்படும் தயிர் மீதான உற்பத்தி வரி கிலோவுக்கு 1000 ரூபாவிலிருந்து 2000 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்படும் பாலாடைக்கட்டிக்கான வரி 2000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் இப் புதிய வரி திருத்தத்தினால் புறக்கோட்டை வியாபாரிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *