மீண்டும் வரி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை – ரணில்

இமை வானொலியை கேட்க இங்கே அழுத்தவும்

இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மீண்டும் வரி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ப்ளூம்பேர்க் இணையதளத்திற்கு அளித்த பேட்டியின் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்குப் பின் சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் நிதி அமைச்சர் என்ற வகையில் நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? என்று ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்துடனான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் நேற்று இணைந்து கொண்டேன். அவர்களின் முன்மொழிவுகளை நாம் அங்கீகரிக்க முடியும் என்றாலும், ஒரு சிக்கல் உள்ளது. 2025 க்குள் நமது வரவு செலவு திட்டத்தில் 2% முதன்மை உபரியை பராமரிக்க அல்லது கடக்க IMF விரும்புகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் 2023ஆம் ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு உகந்ததாக இல்லை. 1% முதன்மை உபரியை பராமரிப்பதே எமது இலக்கு என நான் முன்மொழிந்தேன். பொருளாதாரத்தை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்துவேன் என்றும் தெரிவித்தேன். இந்தப் பொருளாதாரத்தை ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்றுவதன் மூலம், நாம் செலுத்தும் நிலுவைத் தொகையை உபரியாகப் பெற முடியும். ஏனென்றால் ஒரு நாள் நாம் எமது வெளிநாட்டுக் கடன்களை செலுத்த வேண்டிவரும். நாம் வருமானத்தை ஈட்டவில்லை என்றால் கடனில் சிக்க வேண்டிய நிலை ஏற்படும். கடனை செலுத்த முடியாத நிலை மீண்டும் ஏற்படும். நமது முறைமைகளையும் பொருளாதார திட்டங்களையும் மாற்ற வேண்டும்.

ஊடகவியலாளர்: எதிர்காலத்தில் வரவு செலவுத் திட்டமொன்று சமர்ப்பிக்கப்படும் என கூறியுள்ளீர்கள். IMF திட்டத்தின் ஊடாக வரி அதிகரிப்பு செய்யப்பட வேண்டுமா?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க : வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படும். நாம் அதனை மீண்டும் செய்வோம். ஆனால் பட்ஜெட்டின் முக்கிய குறிக்கோள் எமது செலவினங்களைக் குறைப்பதாகும். கல்வி, சுகாதார சேவையை தவிர. அந்த குறைப்பு மூலம் அந்த பணத்தை சமூக நலனுக்காக பயன்படுத்தலாம். ஏனெனில் இந்த பொருளாதார நெருக்கடியால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது மற்றும் அவர்களின் கோபத்தை என்னால் உணர முடிகிறது. சிலரால் ஒரு வேளை உணவை கூட பெற முடியாத நிலை உள்ளது.

ஊடகவியலாளர்: இறையாண்மைப் பத்திரங்களைத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை நாங்கள் அறிவோம், மேலும் சீனக் கடனைத் திருப்பிச் செலுத்துதல் மற்றும் மறுசீரமைப்பு குறித்து சீனாவின் பார்வை என்ன?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க: சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தையின் பின்னர் சீனாவுடன் பேசுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். கடனை மறுசீரமைக்க நாங்கள் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

ஊடகவியலாளர்: சீனாவுக்கு எவ்வளவு செலுத்த வேண்டும்? சீனாவின் கடன் வலையில் நாம் சிக்கியுள்ளோமா?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க – உண்மையில் நாம் கடன் வலையில் இல்லை. சீனாவும் ஜப்பானும் ஒரே மாதிரியான கடன் விகிதங்களைக் கொண்டிருந்தாலும், சீனா அதிக வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளது.